அதி நவீன வசதிகளுடன்; துபாயில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி தொடங்கினார் தோனி: நீண்டநாள் கனவு நனவானதாக பெருமிதம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் பயிற்சி அகாடமியை துபாய் நகரில் தொடங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு உலகளாவிய அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கவேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்தது. தனது வளர்ச்சிக்கு உதவிய கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் செய்யவேண்டிய கடமையாக தோனி இதைக் கருதிவந்தார்.

இந்நிலையில் தனது கனவை நிறைவேற்றும் வகையில் துபாய் நகரில் உள்ள அல் குவோஸ் எனும் இடத்தில் ஒரு கிரிக்கெட் பயிற்சி அகாடமியை அவர் அமைத்துள்ளார். துபாயில் உள்ள பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப், ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தோனி அமைத்துள்ளார்.

எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி அகாடமியில் வீரர்கள் பயிற்சிபெற வசதியாக நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், 4 செயற்கை இழை ஆடுகளங்கள், 3 சிமெண்ட் ஆடுகளங்கள், 3 மேட் ஆடுகளங்கள், சுழற்பந்து மற்றும் வேகப்பந்துகளை வீசும் பிரத்தியேக மிஷின்கள், வீடியோ அனலைசஸ் செய்வதற்கான வசதிகள், இரவிலும் பயிற்சி செய்ய சக்திவாய்ந்த மின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த விஷால் மஹாதிக் என்பவர் தலைமையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இங்கு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த கிரிக்கெட் பயிற்சி அகாடமியை மகேந்திர சிங் தோனி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய தோனி, “கிரிக்கெட் உலகுக்கு ஏதாவது திரும்பச் செய்யவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இந்த பயிற்சி அகாடமியை தொடங்குவதன் மூலம் என்னுடைய அந்த கனவு நிறைவேறியுள்ளது.

அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். என் எதிர்க்கால கனவுக்கு இந்த அகாடமி ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த அகாடமி சிறப்பாக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். இங்கு பயிற்சி பெறும் இளம் வீரர்களின் உத்வேகத்தைப் பொறுத்தும் இதன் வளர்ச்சி அமைந்துள்ளது” என்றார்.

Sharing is caring!