அரசியலை மறந்து போட்டியை இணைந்து ரசிக்க முன்வாருங்கள்… நாளைய அனல் பறக்கும் போட்டிக்கு அழைப்பு..!

இந்தியா பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையில் நாளை இடம்பெறப்போவது ஒரு கிரிக்கெட் போட்டி மாத்திரமே. நாங்கள் ஓன்றிணைந்து அதனை இரசிப்போம் என பாரத் ஆர்மி என்ற இந்திய இரசிகர்கள் பாக்கிஸ்தான் இரசிகர்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது இந்திய அணிக்கு ஆதரவாக மைதானங்களிற்கு செல்லும் இரசிகர்கள் குழுவொன்றே பாரத் ஆர்மி . இந்த குழு 1999இல் உருவாக்கப்பட்டது என அதன் ஸ்தாபகர் ராகேஸ் பட்டேல் தெரிவிக்கின்றார்.1999 இல் உலககிண்ணப்போட்டிகள் இடம்பெற்ற வேளை கார்கில் மோதல்கள் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் கடும் அரசியல் பதட்டம் காணப்பட்டது, அவ்வேளை இங்கு மான்செஸ்டரில் இடம்பெற்ற போட்டியை பார்வையிட நான் இந்திய இரசிகர்களை ஓரு குழுவாக திரட்டி அழைத்துவந்தேன் என பாரத் ஆர்மியின் ஸ்தாபகர் ராகேஸ் பட்டேல் தெரிவித்துள்ளார்.அவ்வேளை மைதானத்தில் 70 வீதமானவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவாளர்களாகவும் சீற்றமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரத் ஆர்மி போன்ற ஒன்று திரட்டப்பட்ட இரசிகர்கள் குழுவொன்று இந்திய அணிக்கு அவசியமாகவுள்ளது இதுவே பாரத் ஆர்மியின் தோற்றத்திற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் தற்போது 30,000 பேர் பாரத் ஆர்மியில் உள்ளனர்,எனது பாரத்ஆர்மியின் 20 வருட கொண்டாட்டத்திற்காக பாக்கிஸ்தான் இரசிகர்களையும் அழைத்துள்ளோம் என ராகேஸ் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை போட்டி கிரிக்கெட் குறித்ததாக மாத்திரம் காணப்படும் என தெரிவித்துள்ள ராகேஸ் பட்டேல் நாங்கள் அரசியல் விடயங்கள் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த கால அனுபவங்கள் பாக்கிஸ்தான் இரசிகர்களை மதிக்கவேண்டியதை எங்களிற்கு கற்றுக்கொடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நான் எனது தேசியகீதத்தை உணர்ச்சியுடன் பாடுவேன் என தெரிவித்துள்ள பாரத் ஆர்மியின் இரசிகர் ஒருவர் அதேவேளை இது வெறும் விளையாட்டு மாத்திரமே என்பதை நான் கருத்திலெடுப்பேன் மிகச்சிறந்த போட்டியை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.எங்கள் செய்தி இலகுவானது. கிரிக்கெட் இரசிகர்கள் என்ற வகையில் இருநாடுகளின் இரசிகர்களும் இந்த போட்டியை கொண்டாடுவோம் என ராகேஸ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!