அழுத்தத்துடன் விளையாடியதால் ஓட்டங்களை பெற முடியவில்லை…

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தேவையற்ற விதத்தில் அழுத்தத்துடன் விளையாடியதால் ஓட்டங்களைப் பெற முடியாது போனதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமைக்கு அதுவே பிரதான காரணம் என திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்கா 9 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றது.

இலங்கை நிர்ணயித்த 204 ஓட்டங்கள் இலக்கை தென் ஆபிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு அடைந்தது.

6 புள்ளிகளுடன் ஏழாமிடத்திலுள்ள இலங்கை எஞ்சிய ​2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து தனது 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தாலே இலங்கை அணியால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

இலங்கை அணி நாளை மறுதினம் (01) மேற்கிந்தியத் தீவுகளையும் எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தியாவையும் எதிர்த்தாடவுள்ளது.

இங்கிலாந்து அணி நாளை இந்தியாவுடனும், எதிர்வரும் 3 ஆம் திகதி நியூஸிலாந்துடனும் மோதவுள்ளது.

Sharing is caring!