அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகள்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது நடைபெற்றுவரும் அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் சோபியா கெனின்னும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச பரபரப்பை ஏற்படுத்திய இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு கொண்டுச் சென்றது.
டை பிரேக் வரை நகர்ந்த முதல் செட்டில், சோபியா கெனின் கடுமையாக போராடி 7-6 என செட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.

இதிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சோபியா கெனின், 7-5 என செட்டைக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

……………..
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவும், ரோமேனியாவின் சிமோனா ஹெலப்பும் மோதினர்.

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நீண்டது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய கர்பீன் முகுருசா செட்டைக் 7-6 என கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய கர்பீன் முகுருசா, செட்டை 7-5 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், கர்பீன் முகுருசா, அமெரிக்காவின் சோபியா கெனின்னை எதிர்த்து விளையாடவுள்ளார்.
……………………

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரரும், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களிக் கரகோஷத்திற்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், முதல் செட்டே டை பிரேக் வரை நீண்டது.

இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதும், இறுதி தருணத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நோவக் ஜோகோவிச், செட்டை 7-6 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற செட்டுகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நோவக் ஜோகோவிச், செட்டுகளை 6-4, 6-3 என செட்டுகளை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Sharing is caring!