ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது

ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது.

தொடரின் மூன்றாவது போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 72 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

250 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியின் தொடர் தோல்வியையடுத்து 14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!