ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்ற மெஸ்ஸி

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) ஆறாவது தடவையாகவும் சுவீகரித்துள்ளார்.

சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் பிரகாசித்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களைக் கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கல் விழா இத்தாலியின் மிலான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

சர்வதேச கால்பந்தாட்ட வீரர்கள், பயிற்றுநர்கள் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் என பலரும் இந்த விருது வழங்கல் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் இளம் வீரரான கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் அதித ஆற்றலை வெளிப்படுத்தியமைக்காக ஆண்டின் அதிசிறந்த வீரர் விருது லியோனல் மெஸ்ஸிக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை மெஸ்ஸி வெற்றிகொள்ளும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் இறுதியாக 2015 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றிருந்தார்.

இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லியோனல் மெஸ்ஸி இந்த விருதை இதற்கு முன்னர் சுவீகரித்துள்ளதுடன், தொடர்ச்சியாக 3 வருடங்கள் இந்த விருதை வென்ற ஒரே ஒரு வீரராகவும் பதிவாகியிருந்தார்.

இதேவேளை, ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் Megan Rapinoe சுவீகரித்துள்ளார்.

இவ்வருட மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக கோல்களைப் போட்டு தனது தாய்நாடு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு Megan Rapinoe பாரிய பங்காற்றினார்.

இங்கிலாந்து கழகமட்ட போட்டிகளில் லிவர்பூல் அணி பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரிப்பதற்கும் இவ்வருடத்தில் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிப்பதற்கும் வழிசமைத்த Jurgen Klopp ஆண்டின் அதிசிறந்த பயிற்றுநருக்காக விருதை வெற்றிகொண்டார்.

லிவர்பூல் கழக அணியின் Alisson Becker ஆண்டின் அதிசிறந்த கோல்காப்பாளராக தெரிவானார்.

இவ்வருட போட்டிகளில் அதிசிறந்த கோலை போட்டவருக்கு பரிசளிக்கப்படும் புஸ்காஸ் விருது ஹங்கேரி அணியின் 18 வயதான Daniel Zsori க்கு பரிசளிக்கப்பட்டது.

கால்பந்தாட்ட நியதிகளை மதித்து, கால்பந்தாட்டத்தின் மகத்துவத்தை பேணி பாதுகாத்தமைக்கான விருது ஆர்ஜென்டினாவின் முன்னாள் வீரரும் தற்போதைய முகாமையாளருமான Marcelo Bielsa க்கு வழங்கப்பட்டுள்ளது.

Sharing is caring!