ஆஷஸ் கோப்பை வென்றது ஆஸி.,: சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4–0 என ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில், ஆஸ்திரேலிய அணி 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், சிட்னியில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 346, ஆஸ்திரேலியா 649/7 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரூட் (42), பேர்ஸ்டோவ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி (13) ஏமாற்றினார். அடுத்து வந்த ஜோ ரூட், அரைசதமடித்தார். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக ஜோ ரூட், 58 ரன்னில் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆனார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பேர்ஸ்டோவ் (38), ஸ்டூவர்ட் பிராட் (4), கிரேன் (2) அவுட்டாகினர். ஹேசல்வுட் பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (2) வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 180 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. கரான் (23) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4–0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கைப்பற்றினார்.

Sharing is caring!