ஆஸி.,யை வென்றது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பர்மிங்காமில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் (61), ஜேசன் ராய் (44) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கேப்டன் இயான் மார்கன் (15) நிலைக்கவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸ் (49), ஜோ ரூட் (35) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது.

பின்ச் நம்பிக்கை

கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஷார்ட் (16) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் (10), டிராவிஸ் ஹெட் (15) நிலைக்கவில்லை. அடில் ரஷித் பந்தில் அலெக்ஸ் கேரி (3), ஸ்டாய்னிஸ் (0) அவுட்டாகினர். அபாரமாக ஆடிய கேப்டன் ஆரோன் பின்ச் (84) நம்பிக்கை தந்தார். ஆஷ்டன் ஏகார் (29), ஆன்ட்ரூ டை (20) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி, 19.4 ஓவரில், 193 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் ஜோர்டான், ரஷித் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி, 1–0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

Sharing is caring!