இங்கிலாந்துடனான டெஸ்ட்…இந்தியா வலுவான நிலையில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில்,  3வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ்-ல் நடைபெற்று வருகிறது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்கிசில் முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.  5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தனது கடைசி 5 விக்கெட்டுக்களை வெறும் 22 ரன்களுக்கு பறிகொடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 46 ரன்கள் எடுத்தது.  மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீசினர். இதனால், 38 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியா 6 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் எடுத்தார். இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா  2வது இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் ராகுல் மீண்டும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ராகுல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்த புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாசிய தவான் 44 ரன்களில் ரஷித் பந்தில் பேர்ஸ்டோவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் குவித்தது. புஜாரா 33 ரன்களுடனும் கோலி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா 292 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Sharing is caring!