இங்கிலாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற இந்தப் போட்டி சீரற்ற வானிலையால் சுமார் 6 மணித்தியாலங்கள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதனால், போட்டியில் ஓவர்களின் எண்ணிக்கை 21 ஆக குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.

இவர்கள் 5.3 ஓவர்களில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும், நிரோஷன் திக்வெல்ல 36 ஓட்டங்களுடனும் சதீர சமரவிக்ரம 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்துக்குள்ளானது.

இந்தநிலையில், அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களையும் தசுன் ஷானக 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனையடுத்து, இலங்கை அணி 21 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்றது.

151 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 153 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ரோய் 41 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒயின் மோகன் 58 ஓட்டங்களை பெற்று தனது 41 ஆவது அரைச் சதத்தை பூர்த்தி செய்தார்.

பென் ஸ்டொக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரை 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இந்தப் போட்டி உட்பட தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டி.வி வன் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!