இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது ஈரான்

இங்கிலாந்து எண்ணெய் கப்பலை 23 ஊழியர்களுடன் ஈரான் சிறை பிடித்துள்ளது.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிரியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற ஈரான் கப்பலை ஜிப்ரால்டர் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவிற்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாகக் குற்றம் சாட்டியது. இதனால் கோபமடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால், இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் குறித்த இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதி அரேபியா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 23 ஊழியர்கள்உள்ளனர். அவர்கள் இந்தியா, ரஷ்யா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.

Sharing is caring!