இங்கிலாந்து 278 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 278 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களையும், இலங்கை 336 ஓட்டங்களையும் பெற்றன.

46 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து 4 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

ஜெக் லீச் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

ரொரி பேர்ன்ஸ் 59 ஓட்டங்களைப் பெற்றதுடன், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஜோ ரூட் தனது 15 ஆவது டெஸ்ட் சதத்தை எட்டினார்.

146 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதி நேரத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய பென் போக்ஸ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அகில தனஞ்சய 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை அவர் வீழ்த்திய மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் போதிய வெளிச்சமின்மையால் தடைப்பட்டு இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Sharing is caring!