இந்தியாவின் வெற்றி தொடருமா

இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது ‘டுவென்டி–20’ போட்டி இன்று நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி டப்ளின் நகரில் இன்று நடக்கவுள்ளது.

முதல் போட்டியில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் ரன் மழை பொழியலாம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இவர்களே துவக்க வீரர்களாக களமிறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்போட்டியில் ஏமாற்றிய ரெய்னா, கேப்டன் விராத் கோஹ்லி, தோனி எழுச்சி கண்டால் இமாலய இலக்கை பதிவு செய்யலாம். இங்கிலாந்து தொடருக்கு தயாராக, கடந்த போட்டியில் விளையாடாத லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்கலாம். ஒருவேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ‘மிடில்–ஆர்டரில்’ களமிறக்கப்படுவர்.

வேகப்பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார், ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை அளிக்கின்றனர். முதல் போட்டியில் ‘சுழல் ஜாலம்’ காட்டிய ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் (4 விக்கெட்), யுவேந்திர சகால் (3) ஆகியோர் மீண்டும் விக்கெட் வேட்டை நடத்தலாம்.

ஷனான் ஆறுதல்: சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் உள்ள அயர்லாந்து அணிக்கு ஜேம்ஸ் ஷனான் மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். இவருக்கு பால் ஸ்டிர்லிங் ஒத்துழைப்பு தந்தால் நல்ல துவக்கம் கிடைக்கும். ஆன்டி பால்பிர்னீ, சிமி சிங், கேப்டன் கேரி வில்சன், கெவின் ஓபிரையன் எழுச்சி கண்டால் நல்ல ஸ்கோரை பெற்றுத்தரலாம்.

வேகப்பந்துவீச்சில் பீட்டர் சேஸ், 4 விக்கெட் கைப்பற்றி நம்பிக்கை தந்தார். இவருக்கு பாய்டு ரான்கின், ஸ்டூவர்ட் தாம்ப்சன், கெவின் ஓபிரையன் ஒத்துழைப்பு தந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம். ‘சுழலில்’ ஜார்ஜ் டாக்ரெல், சிமி சிங், பால் ஸ்டிர்லிங் எழுச்சி காண வேண்டும்.

Sharing is caring!