இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், சென்னையில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க ஸ்விட்சர்லாந்தின் முதற்தர வீராங்கனை மறுப்புத் தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான ஆம்ப்ரே அல்லின்க்ஸ் (Ambre Allinckx), சென்னையில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலில் பங்கேற்பதாக இருந்தார்.

ஆனால், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த எதிர்மறையான செய்திகளைப் படித்த ஆம்ப்ரேவின் பெற்றோர், தங்கள் மகள் சென்னை போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என ஸ்விட்சர்லாந்து அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்கள்.

பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளால் தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் தங்கள் மகளை அங்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றும் தங்கள் முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தகவலை ஸ்விட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, ஈரான், அவுஸ்திரேலிய விளையாட்டு நிர்வாகங்களும் கவலையடைந்துள்ளன.

இதனால், பாதுகாப்புக் குறித்து அவதானமாக இருக்குமாறு அந்நாடுகள் தமது வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

எனினும், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைவரும் திருப்தியடைந்துள்ளதாக சர்வதேச ஸ்குவாஷ் சங்கம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!