இந்தியாவை வெல்லும் அணிக்கே உலகக்கிண்ணம்: மைக்கல் வாகன்

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் கடந்த வியாழக்கிழமை (27) நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 268/7 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 143 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.  இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மேலும், இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாகவும் இந்தியா திகழ்கிறது.

இரண்டு தடவைகள் உலகக்கிண்ணத்தை வென்றுள்ள இந்திய அணி இம்முறை ஆடிய 6 ஆட்டங்களில் 5 இல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது. மழை காரணமாக நியூஸிலாந்து உடனான ஆட்டம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கல் வாகன், இம்முறை இந்திய அணியை வீழ்த்தும் அணிக்கே உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!