இந்தியா-இங்கிலாந்து சென்னை டெஸ்ட் போட்டிகள்… ரசிகர்களுக்கு அனுமதி இல்லையென அறிவிப்பு !

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி தாயகம் திரும்பியது. டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவின் வரலாற்று சாதனையை தகர்த்தது. மேலும் தோற்கும் நிலையில் இருந்து புதுமுக வீரர்கள் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. பிப்.5 முதல் 9ஆம் தேதி வரை முதல் போட்டியும், பிப்.13 முதல் 17ஆம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட போட்டியும் நடைபெறவுள்ளது.

கடைசி இரு டெஸ்ட் போட்டிகளும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மோதரா ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இதையொட்டி வருகிற 27ஆம் தேதிக்குள் இரு அணி வீரர்களும் சென்னை வர உள்ளனர்.

இது, கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராகும். வெளிஅரங்கில் நடக்கும் போட்டிகளில் 50 சதவீதம் வரை ரசிகர்களை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், பிசிசிஐ ரசிகர்களை அனுமதிக்க விரும்பவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நடக்கும் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற உள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் பூட்டிய மைதானம் உள்ளே நடைபெறும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு உட்பட்ட கிளப் உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மாநில கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர், நடுவர்கள், பொதுமக்கள் என்று யாருக்கும் டிக்கெட் வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தங்களது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!