இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்தலாம்..!!

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்தலாம் என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ரி20 உலக கோப்பை (ஒக்ரோபர் 18 – நவம்பர் 15) ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல் தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி கூட்டத்தில் உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து அடுத்த மாதம் முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. தவிர, அடுத்த மாதம் முதல் அவுஸ்திரேலியாவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உலக கோப்பை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்புக்கு பின், வரும் ஒக்டோபரில் ரி20 உலக கோப்பை தொடர் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் 3 வாரங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின், 7 நாட்கள் பயிற்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஐ.சி.சியும் ரி20 உலக கோப்பையை நடத்த முடிவு செய்தால், ஐ.பி.எல் தொடருக்கு சிக்கல் தான். ஒருவேளை உலக கோப்பை நடத்தப்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் முதல், ஐ.பி.எல் தொடரை இலங்கையில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்தலாம். ஏனெனில் செப்டம்பரில் இந்தியாவில் மழைக் காலம் துவங்கிவிடும் என்றார்.

Sharing is caring!