இந்த மேட்சும் போச்சா?… நியூசிலாந்திடமும் மொக்கை வாங்கிய தென்னாப்பிரிக்கா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இதன் மூலம், அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தென்னாப்பிரிக்க அணி அனேகமாக இழந்துள்ளது.

பர்மிங்ஹாம் நகரின் எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதையடுத்து, பேட்டிங் செய்ய தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 241 ரன்களை எடுத்தது.அதிகபட்சமாக வேன் டெட் துசன் 67 ரன்களும், அசிம் ஆம்லா 55 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்புசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

242 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கி நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்து கொண்டே இருந்ததால், தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி முகம் தெரிந்தது. குறிபு்பாக, நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்டில் ஹிட் விக்கெட் முறையில், ஸ்டெம்ப்பை கவனக்குறைவாக தமது காலாலேயே தட்டி விட்டு அவுட் ஆனதும் நியூசிலாந்து இனி அவ்வளவுதான் என, தென்னாப்பிரிக்க ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால், ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தாலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் நின்று நிதானமாக ஆடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவருடன் 6 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிராண்ட் ஹோமி 47 பந்துகளில் 60 ரன்களை விளாசி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

நியூசிலாந்து வெற்றி பெற, ஆட்டத்தின் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில்,, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் வில்லியம்ஸ்சன் சிக்ஸர் விளாச, நியூசிலாந்தின் ஸ்கோர் 245 ஆனது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி் வெற்றி பெற்றது.

Sharing is caring!