இன்று……? இலங்கை கிரிக்கட் நிறுவன தேர்தல்


இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் தொடர்பாக எழுத்தாணை கோரி ஒரு தரப்பினர் நீதிமன்றை நாடியிருந்ததுடன் அது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

இந்தத் தடவை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் அர்ஜூன ரணதுங்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரின் தரப்புகள் போட்டியிடவுள்ளன.

ரணதுங்க தரப்பிலிருந்து தலைவர் பதவிக்காக ஜயந்த தர்மதாஸ வேட்புமனு தாக்கல் செய்ததுடன் சுமதிபால தரப்பில் மொஹான் டி சில்வா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

உபதலைவர் பதவிக்கு ரணதுங்க தரப்பில் அர்ஜூன ரணதுங்க, கே. மதிவாணன் ஆகியோர் போட்டியிடுவதுடன் சுமதிபால தரப்பில் ரவீன் விக்கிரமரத்ன, ஷம்மி டி சில்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எனினும், சுமதிபால தரப்பின் மொஹான் டி சில்வா, மற்றும் ரவீன் விக்கிரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்கள் மேன்முறையீட்டு குழு நிராகரித்தது.

அந்தத் தீர்மானத்துக்கு எதிராக எழுத்தாணை கோரி மொஹான் டி சில்வாவும், ரவீன் விக்கிரமரத்னவும் மேன்முறையீட்டு நீதிமன்றை நாடிச்சென்றதுடன் அவர்களின் மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

உபதலைவர் அல்லது உபசெயலாளர் பதவிக்கு ரவீன் விக்கிரமரத்னவும் செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும் போட்டியிட சந்தர்ப்பமளிக்கும் இணக்கப்பாட்டுக்கு இருதரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர்.

அதற்கமைய, மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவரான நீதிபதி தீபாலி விஜேசுந்தர, நீதிபதி அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் தீர்மானித்தனர்.

Sharing is caring!