இன்று பிரேசில்-மெக்சிகோ மோதல் களத்திற்கு வெளியே நான் அதிகம் பேசுவதில்லை: பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா பேட்டி

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று சமராவில் நடைபெறும் போட்டியில் வலுவான பிரேசில்-மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. குரூப் ஈ-யில் 2 வெற்றிகள், 1 டிரா மூலம் முதலிடத்தை பிடித்துள்ள பிரேசில் அணி, குரூப் எஃப்பில் 2வது இடத்தை பிடித்துள்ள மெக்சிகோ அணியை இன்று வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி, அரையிறுதியில் சொந்த மண்ணில் ஜெர்மன் அணியை எதிர்கொண்டது.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அப்போட்டியில் 7-1 என்ற கணக்கில் ஜெர்மன் அணி, பிரேசிலை பந்தாடி விட்டது. அந்த காயம் இன்னும் ஆறவில்லை என்று தெரிவித்துள்ள பிரேசில் அணி வீரர்கள், இம்முறை உலகக்கோப்பையை வெல்வதே அந்த காயத்துக்கு தகுந்த மருந்து என்ற சூளுரையுடன் ரஷ்ய மண்ணில் கால் பதித்துள்ளனர்.

முதல் ரவுண்டில் முதல் போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்தை, பிரேசில் டிரா செய்தது, அதிர்ச்சி துவக்கமாகத்தான் இருந்தது.

இருப்பினும் சமாளித்து அடுத்தடுத்து கோஸ்டா ரிகா மற்றும் செர்பிய அணிகளை வீழ்த்தி, மிகவும் எளிதாக பிரேசில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்து விட்டது. இன்றைய போட்டியில் பிரேசில் அணி ஒரு மாற்றம் செய்துள்ளது. காயமடைந்த அந்த அணியின் வீரர் மார்சிலோவுக்கு பதிலாக பிலிப்பி லூயிஸ் களம் இறங்க உள்ளார். பிரேசில் கேப்டன் தியாகோ சில்வா, ‘‘களத்திற்கு வெளியே நான் பேசுவதில்லை.

பொதுவாக நான் கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் போட்டியின் போது அதிகம் பேசுவேன்.

எனது அணியின் சக வீரர்கள் , ‘போதும். வலிக்கிறது.

நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறும் வரையில் நான் பேசுவேன்’’ என்று கடந்த ஞாயிறன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
மெக்சிகோ அணியின் மிட் ஃபீல்டர் ஹெக்டர் ஹெரரா கூறுகையில், ‘‘பிரேசில் எவ்வளவு பலம் வாய்ந்த அணி என்பது மற்றவர்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

எங்களால் இப்போட்டியில் வெல்ல முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!