இன்ஸ்ராகிராம் போலியானது…கங்குலி விளக்கம்

இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்கி வருகிறார். ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் கங்குலி , தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக கங்குலி பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்று இருந்தது. அதில் கூறியிருப்பதாவது “கேப்டனாக இருந்தால் வெற்றி பெறும்போது வாழ்த்துவார்கள், தோல்வியடையும்போது விமர்சிப்பார்கள். பேட்ஸ்மென்களை நீக்கும்போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும். முதல் தர கிரிக்கெட்டில் ரன் குவிப்பது எல்லாம் சர்வதேச தரத்துக்கு ஈடாகாது” எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பதிவிட பட்டிருந்தது.

இந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் வைரளாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் கங்குலி தனது ட்விட்டர் பதிவில், “என் பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது. அதில் பதிவாகும் எந்தச் செய்தியையும் எந்தத் தகவலையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!