இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் முதன்முறையாக இரத்தான நிகழ்வுகள்!

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி தீவிரமடைந்துவரும் நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிரான்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜுன் 29 ஆம் திகதி ஆரம்பாகி, ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது.

இந்த புற்தரைப் போட்டித் தொடர் இவ்வாண்டு முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது.

உலகில் எந்தவொரு நாடுகளிலும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை தொழில்முறை ரீதியான டென்னிஸ் போட்டிகள் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2020 யுரோ கிண்ண கால்பந்தாட்ட தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு பிற்போடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரன்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் மே மாதம் ஆரம்பமாகவிருந்த போதிலும் அந்த தொடர் தற்போது செப்டெம்பர் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து சாம்பியன்ஸ் லீக் மற்றும் யுரோப்பா லீக் கால்பந்தாட்டப் போட்டிகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற 55 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேசிய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவிருந்த போட்டிகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 2020 யுரோ கிண்ணத்திற்கான பிளே ஓப் சுற்றுப் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளன.

அத்துடன் 2021 ஆண்டுக்கான மகளிர் யுரோ கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டிகளும் பிறப்போடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பிறிமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!