இரண்டாவது டெஸ்டிலும் முரட்டு ஃபோர்மில் ரூட்!

ஜோ ரூட்டின் முரட்டு ஃபோர்ம் தொடர, இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை- இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நேற்று ஆரம்பித்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நேற்று சதம் கடந்து 107 ஓட்டங்களுடன் இன்று ஆட்டத்தை தொடர்ந்த அஞ்சலோ மத்யூஸ், இன்று மேலதிகமாக 3 ஓட்டங்களை சேர்த்து 110 ஓட்டங்களுடன், அண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 238 பந்துகளில் 11 பௌண்டரிகளுடன் இந்த ஓட்டத்தை குவித்தார்.

கடந்த பல போட்டிகளாக சொதப்பிய- இந்த தொடரில் சதத்தை பெற எதிர்பார்ப்பதாக கூறிய டிக்வெல 144 பந்துகளில் 10 பௌண்டரிகளுடன் 92 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தார். இருவரும் 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இலங்கை ஓரளவு பெரிய ஓட்ட எண்ணிக்கையை குவிக்க இந்த இணைப்பாட்டம் உதவியது.

இதன் பின்னர் இலங்கையின் விக்கெட்கள் ஒரு பக்கம் சரிய ஆரம்பித்தது. கன்னி டெஸ்டில் அடிய ரமேஷ் மென்டிஸ் டக் அவுட்டானார். சுரங்க லக்மல், அசித பெர்ணான்டோவும் டக் அவுட்டாகினார். எம்புல்தெனிய 7 ஓட்டங்களை பெற்றார். இந்த பின்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு தில்ருவான் பெரேரா அரைச்சதம் அடித்தார். 170 பந்துகளில்  பௌண்டரி, 1 சிக்சருடன் 67 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில், இலங்கையணி 139.3 ஓவர்களில் 381 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அண்டர்சன் 29 ஓவர்கள் வீசி 13 ஓட்டமற்ற ஓவர்களுடன், 40 ஓட்டங்களிற்கு 6 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் 5 விக்கெட் வீழ்த்திய 30வது சந்தர்ப்பம் இது. வேகப்பந்துவீச்சாளர்களில் ரிச்சர்ட் ஹட்லிதான் 36 தடவைகள் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மார்க் வூட் 84 ஓட்டங்களிற்கு 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட்டை போலவே, தொடக்க வீரர்கள் சக் கிரெளி, டொம் சிப்ளி ஆகியோர் எம்புல்தெனியவிடம் ஆரம்பத்திலேயே வீழ்ந்தனர். முதலாவது விக்கெட்டாக சிப்ளி டக் அவுட்டானார். அப்போது அணி 4 ஓட்டம் பெற்றிருந்தது. கிரெளி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 5/2.

இந்த இக்கட்டான நிலைமையை கணக்கிலேயே எடுக்காமல் ஜோ ரூட் அடித்து நொருக்கினார். அவர் வேறொரு மூடில் இருந்திருக்க வேண்டும். இன்றைய நாள் முடிவில் 77 பந்துகளில் 10 பௌண்டரியுடன் 67 ஓட்டங்களை பெற்றுள்ளார். முதல் போட்டியில் இரட்டைச்சதமடித்த முரட்டு ஃபோர்மிலிருப்பதால் இலங்கை பந்துவீச்சாளர்களிற்கு பெரிய நெருக்கடியுள்ளது.

அவருடன், ஜொனி பரிஸ்டோ 24 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

எம்புல்தெனிய 33 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அறிமுக வீரர் ரமேஷ் மெண்டிசிற்கு பந்து வீச்சிலும் இன்று கெட்டகாலம். 2 ஓவர்கள் வீசினார். 19 ஓட்டங்கள்.

ஜோ ரூட் இன்று மற்றொரு மைல் கல்லை எட்டினார். அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் பொய்கொட் (8114) கடந்துள்ளார். ரூட் தற்போது 8119 ஓட்டங்களை பெற்றுள்ளார். தற்போது ரூட்டிற்கு மேலேயிருப்பவர் கெவின் பீட்டர்சன். அவர் 8181 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Sharing is caring!