இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றமான நிலையில்

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை அணித்தலைவர் சுரங்க லக்மால் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி முதல் விக்கெட்டிற்காக 116 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

இது 8 வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி பெற்ற சிறந்த இணைப்பாட்டமாகும்.

தனது 16 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய திமுத் கருணாரத்ன 53 ஓட்டங்களையும் முதல் டெஸ்ட் அரைச்சதத்தை அடைந்த தனுஷ்க குணதிலக்க 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி மதியபோசன இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடிய போதிலும் அதன் பின்னர் கேஷவ் மஹாராஜின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

டெஸ்ட் அரங்கில் 5000 ஓட்டங்களைக் கடந்த அஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அகில தனஞ்சய 60 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

பந்து வீச்சில் கேஷவ் மஹாராஜ் 32 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதேவேளை, சர்வதேச ஒருநாள் அரங்கில் பாகிஸ்தான் சார்பாக இரட்டை சதமடித்த முதல் வீரராக பகார் ஷமான் இன்று வரலாறு படைத்தார்.

சிம்பாப்வேவிற்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 156 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 24 பௌண்டரிகளுடன் 210 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற முதல் இரட்டைச்சதமாகும்.

பகார் ஷமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி 304 ஓட்டங்களைப் பகிர்ந்து முதல் விக்கெட்டிற்கான அதிசிறந்த இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியது.

இதன் மூலம் சனத் ஜயசூரிய மற்றும் உபுல் தரங்க ஜோடி 2006 ஆம் ஆண்டு முதல் விக்கெட்டிற்காக நிகழ்த்திய 286 ஓட்டங்கள் சாதனை முறியடிக்கப்பட்டது.

இமாம் உல் ஹக் 113 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அசிப் அலி 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்களைக் குவித்தது.

Sharing is caring!