இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாளில் அணி வீரர்களின் துடுப்பாட்டம் தொடர்பில் திருப்தியடைவதாக இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான ஸாம் கரான் (Sam Curran) தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியின் நிறைவுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (15) தொடரவுள்ளது.

கண்டி – பல்லேகலையில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 285 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

விக்கெட்கள் வீழ்த்தப்பட்டாலும் தனித்துப் போராடிய ஷாம் கரான், அரைச்சதம் கடந்த நிலையில் 64 ஓட்டங்களைப் பெற்று அணியின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தினார்.

உண்மையில் நேற்றைய ஆட்டம் தீர்மானமிக்க இன்னிங்ஸாக அமைந்தது. 300 ஓட்டங்கள் வரை பெறுவதென்பது எமது அணியின் நேர் எண்ணங்களை தரக்கூடியது. 170 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நாம் சரிவில் இருந்தோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஓட்ட எண்ணிக்கைக்கு முன்னேறுவது வெற்றியாகும். ஆதில் ரஷீட் மிகச்சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினார். அதுபோல அன்டர்சன் மற்றும் லீச் உள்ளிட்ட வீரர்களும் நேற்றைய நாளில் பிரகாசித்தார்கள் என இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான ஸாம் கரான் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!