இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் நியூஸிலாந்து அபார வெற்றியீட்டியுள்ளது.

இந்த வெற்றியின் பிரகாரம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1 – 1 எனும் ஆட்டக் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

போட்டியில் ஐந்தாம் நாளான இன்று (26) 5 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களுடன் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

பிஜே வொட்லின் 82 ஓட்டங்களுடனும் கொலின் டி கிராண்ட் ஹோம் 83 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர்.

கொலின் டி கிராண்ட் ஹோமினால் இன்று மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக்கூட பெற முடியவில்லை.

என்றாலும், பிஜே வொட்லிங்க சதமடித்து 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

டிம் சௌவுத்தி 25 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 431 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்துவதாக அறிவித்தது.

அதன்படி இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 187 ஓட்டங்களை பெறவேண்டியிருந்தது.

எனினும், இலங்கை அணி வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் தோல்விக்கு காரணமாய் அமைந்தது.

லஹிரு திரிமான்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, டில்ருவன் பெரேரா ஆகியோர் பொறுப்பற்ற விதத்தில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நிஷேன் திக்வெல்ல அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 70.1 ஓவரில் 122 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

கொழும்பு பீ சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 234 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!