இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

தீபக் சஹாரின் சிறப்பான பந்துவீச்சின் மூலம், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

போட்டியில் பங்களாதேஷ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் 62 ஓட்டங்களை அணி சார்பில் அதிக பட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முதலில் 2 விக்கெட்களை இழந்தபோதும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மிதுன் – நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

10 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களை எடுத்திருந்தது.

பங்களாதேஷ் அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளை, சிவம் துபே மற்றும் தீபக் சஹார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பங்களாதேஷ் அணியின் விக்கெட்கள் சரிந்தன.

முஷ்பிகுர் ரஹீம் மற்றும் அஃபிப் ஹூசைன் ஆகியோர் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழக்க, ஏனைய 4 வீரர்கள் 10 இற்கும் குறைவான ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இதன்மூலம் இருபதுக்கு 20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹார் 3.2 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் சிவம் துபே 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இருபதுக்கு 20 வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் எனும் சாதனையையும் சஹார் படைத்ததுடன்
இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே சஹாரின் பந்துவீச்சே, மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

Sharing is caring!