இலங்கையை சொந்த மண்ணில் விரட்டி அடித்த தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டிம்யுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 3-ஆம் திகதி நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

அணியின் தலைவரான டிம்யுத் கருணரத்னே 2 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், வானிண்டு ஹசிரங்கா 29 ஓட்டங்கள், டுஸ்மந்த் சமீரா 22 ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்கள் கூட தாண்டாததால், இலங்கை அணி இறுதியாக 157 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் துவக்க வீரர் டியான் எல்கர் 127 ஓட்டங்களும், அதன் பின் Rassie van der Dussen 67 ஓட்டங்களும் குவிக்க, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 302 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

145 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் டிம்யுத் கருணரத்னே சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால், டிம்யுத் கருணரத்னே தனி ஒருவனாக தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளித்து வந்தார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சதம் அடித்த அவர் 103 ஓட்டங்களில் வெளியேற இலங்கை அணி இறுதியாக 211 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணியில் டிம்யுத் கருணரத்னே(102). லகிரு திரிமண்ணே(31), நிரோஷன் டிக்வெல்லா(36), வகிண்டு ஹசரங்கா(16) என எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

அதன் பின் 67 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்று கைப்பற்றியது.

Sharing is caring!