இலங்கை அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்

வெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர கூறியுள்ளார்.

இன்று காலை ஸ்போட்ஸ் பெஸ்ட் நடத்திய விசேட கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் தற்போதைய நிலையை விடவும் இங்கிலாந்து அணியின் நிலை சிறப்பானது. இதனால், அவர்களை வெற்றிகொள்வது சிரமமானது. நாட்டு மக்கள் இலங்கை அணி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். போட்டிகளில் வெற்றியீட்ட முடியாமல் போகின்றமை பரவாயில்லை. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. எனினும், தோல்வியடைவதில் ஒரு சீர்தன்மை இருத்தல் வேண்டும். ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும்.

நம்பிக்கை இருக்க வேண்டும். ஆம். நாம் அன்று இருந்ததை விடவும் இன்று வளர்ச்சிப்பாதையில் இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு, துடுப்பாட்டம், களத்தடுப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலுமே நான் இங்கு குறிப்பிடுகிறேன். வெற்றியீட்டுவதை ஒரு புரம் வைத்துவிட்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் பலவீனங்கள் தொடர்பிலும் பந்துல வர்ணபுர கருத்துத் தெரிவித்தார்.

சொந்த மண்ணில் நாம் விளையாடுகிறோம். எனவே, எமக்கே அதிக சாதகங்கள் இருக்கின்றன. எமது ஆடுகளங்களில் அவர்களால் பிரகாசிக்க முடியாது என எமக்கு தெரியும். அதனை நாம் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அணித்தலைவர், பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட அணியின் சிரேஷ்ட வீரர்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.

அவர்களுடைய குறைபாடு என்ன என்பது தொடர்பிலான விளக்கமொன்று எமக்கு இருக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்களின் சுழற்பந்துவீச்சு சவாலானது என நாம் அன்று கூறினோம். எனினும், இன்று எமக்கு இருக்கும் சவால்கள் தொடர்பில் நாம் அறிவோம். அவர்களின் வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுப்பதே எமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

எமது சுழற்பந்துவீச்சாளர்களுடன் சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு நாம் தயாராக வேண்டும். ஒருவர் இருவரை மட்டும் மாற்றியமைத்து மூன்று வகையான போட்டிகளுக்குமான வீரர்களை தயார்படுத்தல் வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!