இலங்கை இளையோர் அணியின் தலைவராக நிபுன் தனஞ்சய

பங்களாதேஷ் இளையோர் அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கை இளையோர் அணியின் தலைவரான நிபுன் தனஞ்சய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தொடருக்கான இலங்கை குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந்த் மற்றும் கொழும்பு சாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை இளையோர் அணிகள் 2 டெஸ்ட் மற்றும் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன.

இந்தத் தொடரில் இலங்கை இளையோர் அணியை நிபுன் தனஞ்சய வழிநடத்துகிறார்.

பங்களாதேஷ் அணி சிறந்ததொரு அணி. இளையோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல்சுற்றுப் போட்டியொன்றில் நாம் பங்களாதேஷுடன் மோதினோம். புதிய வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்நாட்களில் பெற்ற பயிற்சிகளின் மூலம் விரர்கள் சிறந்த மனோதிடத்தைப் பெற்றுள்ளார்கள். அந்த நம்பிக்கையைக்கொண்டு சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை வெற்றியுடன் முடித்துக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றேன் என இலங்கை இளையோர் அணியின் தலைவர் நிபுன் தனஞ்செய கூறியுள்ளார்.

இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர் புதிய வீரர்கள் சிலர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடக்கூடிய வீரர்களே இந்தக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனுபவங்களைப் பெற்றுத்தருவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன் என இலங்கை இளையோர் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்படும் ஹஷான் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொடரை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்தத் தொடர் இரு அணி வீரர்களுக்கும் மிக முக்கியமானதாகும். 2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரே எமது மிகப்பெரிய இலக்காகக் காணப்படுகிறது. எனவே, அதற்காக இந்தத் தொடர் முக்கியமானதாகும் என பங்களாதேஷ் இளையோர் அணியின் தலைவர் டவ்ஹீட் ஹிரோய் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இரு இளையோர் அணிகளும் இதுவரையில் 4 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளதோடு, அதில் இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளதோடு ஏனைய 3 போட்டிகளும் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளது.

அதேநேரம், இரு அணிகளும் 11 சர்வதேச ஒருநாள் ​போட்டிகளிலும் ​மோதியுள்ளதுடன் அதில் பங்களாதேஷ் 6 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை இளையோர் அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது.

Sharing is caring!