இலங்கை கிரிக்கெட்டில் முறையற்ற கொடுக்கல் வாங்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம், போட்டி ஒளிபரப்பு உரிமையை வழங்குவது தொடர்பாக பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலோ வெளிநாட்டிலோ நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை அரச ஊடகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என 2011 ஜூன் 27 ஆம் திகதி அனுமதி அளிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், விளையாட்டுப் போட்டிகளுக்காக மாத்திரம் அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு தனியார் தொலைக்காட்சி அல்லது வானொலி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான உரிமையை வழங்க முடியும் எனவும் குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

என்றாலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உள்நாட்டு வானொலி ஒளிபரப்பு உரிமையை வழங்கும்போது அந்த செயற்பாடுகள் மற்றும் விலைமனு கோரல் முறைமையைப் பின்பற்றாமல் இந்தக் கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறித்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அந்த நடவடிக்கைகளை தமது பிரத்தியேக மின்னஞ்சல் முகவரியூடாகவே மேற்கொண்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்டமை மற்றொரு விடயமாகும்.

2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரின் போட்டி ஒளிபரப்பு உரிமையும் இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவினதோ அல்லது நிறைவேற்றுக் குழுவினதோ அனுமதி இன்றியே வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை தொடர் ஆரம்பமாவதற்கு 4 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளமையும் இதன்போது கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் ஒளிபரப்பு உரிமைக்காக பணம் அறவிடுவதற்கு 2018 மார்ச் 5ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்வைத்த (SLC 1814) எனும் இலக்கமுடைய வரிப் பட்டியல் VIS BROADCASTING (PVT) LTD க்கு விநியோகிக்கப்பட்ட போதிலும் பணம் செலுத்தப்பட்ட காசோலையின் பிரகாரம் SKY MEDIA NETWORK (PVT) LTD நிறுவனமே பணத்தை செலுத்தியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!