இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 64 மில்லியன் ரூபா விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்க அனுமதி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றின.

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான கொடுப்பனவாக நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வௌிநாட்டு பிரத்தியேகக் கணக்கொன்றுக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை இதன் அண்மித்த சம்பவமாகும்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தியதோடு , கடந்த மே மாதம் 02 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் 64 மில்லியன் ரூபா விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்து 02 நாட்களின் பின்னரே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 19 ஆம் திகதி கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் நடைபெறவிருந்ததோடு, கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சந்தேகம் நிலவியது.

எனினும், இன்று வரையில் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த விளையாட்டுக் கழகங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளித்தமை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஒரு மில்லியன் முதல் 10 மில்லியன் வரையில் 12 விளையாட்டு சங்கங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில கழகங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில கழகங்களுக்கு சிலரின் பெயரில் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெசாக் உற்சவத்திற்காக மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்திற்கு ரூபா 3 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் எதற்காக முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கின்ற போதிலும் , விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைசர் முஸ்தபா அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

ஓர் ஆண்டுக்கு பல மில்லியன் ரூபா வருமானத்தைப் பெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மோசடிகள் மிகுந்த நிறுவனமாக மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் நபர்கள் கடந்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் நிறுவனத் தலைவரான திலங்க சுமதிபாலவிற்கு ஆதரவளித்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணக்காய்வாளர் நாயகமே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்கறிக்கை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும்.

Sharing is caring!