இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி 7 ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான தோல்வியே இலங்கையின் பின்னடைவிற்கான காரணமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணி தாயகத்தில் இங்கிலாந்திடம் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் வீழ்ந்தது.

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களை அமைத்து இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை சிரமத்தில் ஆழ்த்த இலங்கை முயற்சித்தாலும் அதன் முழு பலனையும் இங்கிலாந்தே பெற்றுக்கொண்டது.

3 டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தப்பட்ட இலங்கை அணியின் 60 விக்கெட்களில் 49 விக்கெட்களை ஜெக் லீச், ஆதில் ரஷிட், மொயின் அலி ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர்.

அத்துடன், 141 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் 40 விக்கெட்களில் 38 சுழற்பந்துவீச்சாளர்களால் வீழ்த்தப்பட்ட சாதனையும் இத்தொடரில் பதிவானது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த சாதனை நிகழ்ந்ததுடன், அதில் இங்கிலாந்தே பெருமைக்குரிய அணியாகத் திகழ்ந்தது.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய குறைபாடு இந்தத் தொடரில் கவனம் செலுத்தப்பட்ட மற்றொரு காரணியாகும்.

தொடரில் இலங்கையின் ஒரு துடுப்பாட்ட வீரராலேனும் சதமடிக்க முடியாது போனதுடன், 6 இன்னிங்ஸ்களில் நான்கில் இலங்கை 250 ஓட்டங்களுக்கு மட்டுப்பட்டது.

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் எவராலும் இத்தொடரில் சதமொன்றைக்கூட பெற முடியாவிட்டாலும், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் சதமடித்தனர்.

அவர்களில் ஒருவர் அறிமுக வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

களத்தடுப்பு குறைபாடுகள் நீண்ட காலமாக இலங்கை அணியில் நிலவும் பிரச்சினை என்பதை பயிற்றுநர் தர்க்கமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார்.

Sharing is caring!