இலங்கை வீரர்களின் விலகல் குறித்து ரமீஸ் ராஜா கவலை

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணி வீரர்கள் 10 பேர் விலகியமை தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா ( Rameez Raja) தனது ஏமாற்றத்தை வௌிப்படுத்தியுள்ளார்.

இதற்கான காரணத்தை தன்னால் இதுவரையில் ஊகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை ரமீஸ் ராஜா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தத் தொடரை தவிர்த்துவிட்டு இலங்கை அணி வீரர்கள் இருவர் லீக் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை வீரர்களின் இந்தத் தீர்மானத்தின் பின்னணியில் இந்தியா செயற்படுவதாக பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதனையடுத்து, பாகிஸ்தானின் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மறுத்திருந்தார்.

எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் தொடரில் விளையாடவுள்ள இலங்கைக் குழாம் பெயரிடவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் மோதவுள்ளன.

Sharing is caring!