இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள்

10 வருடங்களின் பின்னர் தமது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை கண்டுகளிக்கும் வாய்ப்பு இன்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கிட்டியது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை அணி வீரர்களுக்கு தமது தேசிய அணியின் தொப்பியை பரிசளித்து தமது உறவை பகிர்ந்துகொண்டனர்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

32 வயதான அபிட் அலியும் 25 வயதான உஸ்மான் ஷின்வாரியும் பாகிஸ்தான் சார்பாக இன்று டெஸ்ட் அறிமுகம் பெற்றனர்.

முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் 9 மாதங்களின் பின்னர் இலங்கை பதினொருவர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

போட்டியில் ஓசத பெர்னாண்டோவுடன் திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்காக 96 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் முதல் விக்கெட் 96 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில், திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஓசத பெர்னாண்டோ 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணி மேலும் 18 ஓட்டங்களை பெறுவதற்குள் அடுத்த 2 விக்கெட்களை இழந்தது.

தினேஷ் சந்திமால் 2 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

எனினும், அதன் பின்னர் இணைந்த தனஞ்சய டி சில்வா மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்காக 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சற்று ஆறுதல் அளித்தது.

அஞ்சலோ மெத்தியூஸ் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணி 68.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்ற போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Sharing is caring!