இளம் வீரர்களை பரிசோதித்த இங்கிலாந்து பின்னி எடுத்த பெல்ஜியம்: ஜி பிரிவில் முதலிடத்தை பிடித்தது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘ஜி’யின் கடைசி போட்டியில் நேற்று இரவு இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்று குரூப் ஜி-யில் முதலிடம் பிடித்தது.

குரூப் ஜி-யில் உள்ள இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, முதலிடம் பிடித்து, குரூப் எச்-ல் 2வது இடத்தில் உள்ள அணியோடு முதல் நாக் அவுட் சுற்றில் மோதும்.

ஆனால், அதை தொடர்ந்து வரும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறினால், பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டினா, போர்ச்சுகல் போன்ற பலமான டாப் 10 அணிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். அதேநேரம், இந்த போட்டியில் தோற்கும் அணி, குரூப் எச்-ல் முதலிடம் பிடிக்கும் அணியையும், அதை தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதியில், டென்மார்க், குரோஷியா, ஸ்வீடன், சுவிஸ் போன்ற சிறிய அணிகளுடன் மோத வாய்ப்பு இருந்தது.

ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், இரு அணியின் பயிற்சியாளர்களும், இளம் வீரர்களை களமிறக்கி சோதனை செய்தனர்.
இளம் நட்சத்திர வீரர்களை கொண்ட பெல்ஜியம், ஆட்டம் ஆரம்பம் ஆனதும் அசத்த ஆரம்பித்தது. தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.

இங்கிலாந்து தரப்பில் இருந்தும் பெல்ஜியத்திற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், முதல் பாதி, கோல் எதுவும் இல்லாமலே முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கி 5 நிமிடங்களில், பெல்ஜியம் அணியின் யனுசாஜ் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து பெல்ஜியம் அணியே முழு ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் போட்டி 1-0 என முடிந்தது. குரூப் ஜி-யில் பெல்ஜியம் முதலிடம் பிடித்தது.

குரூப் எச்-ல் இரண்டாவது இடம் பிடித்த ஜப்பானுடன் பெல்ஜியம் மோதுகிறது. ஏற்கனவே நாக் அவுட் வாய்ப்பை இழந்துவிட்ட, குரூப் ஜி-யின் பனாமா மற்றும் துனிசியா அணிகள் மோதிய போட்டியில், துனிசியா 2-1 என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!