இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றி

19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பமானது.

இதில் B குழுவிற்கான போட்டியொன்றில் இலங்கை அணி பங்களாதேஷை எதிர்த்தாடியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் இளையோர் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் இளையோர் அணி சார்பாக அணித்தலைவர் டப் ஹிட் ஹீட்ரோடி அதிகபட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.

கல் ஹார சேனாரத்ன , ஷஷிக துல்ஷான், துலித் வெல்லகே ஆகியோர் தலா 02 விக்கெட்களை வீழ்த்தினர்

142 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி 38 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்களையும் இழந்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நுவனிது பெர்னாண்டோ இறுதி வரை களத்தில் நின்று 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பசிது சூரிய பண்டார 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, இலங்கை இளையோர் அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Sharing is caring!