உலகளாவிய ஐ.சி.சி நிகழ்வில் முதல் பெண் போட்டி நடுவராக களமிறங்கும் ஜி.எஸ். லட்சுமி!

மகளிர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூலம், உலகளாவிய ஐ.சி.சி நிகழ்வில் முதல் பெண் போட்டி நடுவராக, இந்தியாவின் முன்னாள் வீராங்கனை ஜி.எஸ். லட்சுமி களமிறங்க உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள மகளிர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது, பெப்ரவரி 21 முதல் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), மகளிர் டி 20 உலகக் கோப்பையின் லீக் அட்டவணை, 23 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்று போட்டி நடுவர்கள் மற்றும் 12 நடுவர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த தொடரின் போது இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீராங்கனையான, 51 வயதான ஜி.எஸ். லட்சுமி முதல் பெண் போட்டி நடுவராக அறிமுகமாக உள்ளார்.

பெப்ரவரி 22 ஆம் தேதி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தாய்லாந்து பெண்கள் அணிக்கெதிரான போட்டியில் நடுவராக பணியாற்ற உள்ளார்.

கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் 2 இன் மூன்றாவது தொடரின் துவக்க ஆட்டத்தில் நடுவராக களமிறங்கிய ஜி.எஸ். லட்சுமி, சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்கிற பெருமையினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!