உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

ஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார்.

இதேவேளை, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 224 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராகவும் ஏனைய அணிகளுக்கு எதிராகவும் இந்தியா ஈட்டிய பாரிய வெற்றி இதுவாகும்.

மும்பை பிறேபௌர்ன் (Brabourne) மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியை முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டென்டுல்கர் ஆரம்பித்து வைத்தார்.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மும்பை Brabourne மைதானத்தில் சர்வதேச போட்டியொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்தியா சார்பாக ஒருநாள் அரங்கில் கூடிய ஓட்டங்களை குவித்த இரண்டாவது ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி என்ற சிறப்பைப் பெற்றனர்.

ஷிகர் தவான் 38 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தனது 350 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அணித்தலைவர் விராட் கோஹ்லியினால் இந்தப்போட்டியில் 16 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

அம்பாத்தி ராயுடு மற்றும் ரோஹித் சர்மா ஜோடி மூன்றாவது விக்கெட்காக 211 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியா 300 ஓட்டங்களைக் கடப்பதற்கு வழிவகுத்தது.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஒருநாள் அரங்கில் 21ஆவது சதத்தை எட்டிய நிலையில், ஏழாவது தடவையாகவும் 150 ஓட்டங்களைக் கடந்தார்.

இதன்மூலம், ஒருநாள் அரங்கில் 21 சதங்களை வேகமாகக் கடந்த உலகின் நான்காவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா பதிவானார்.

எனினும், அவர் 162 ஒட்டங்களைப் பெற்றிருந்தநிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய அம்பாத்தி ராயுடு ஒருநாள் அரங்கில் 3ஆவது சதத்தை பூர்த்திசெய்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் 6 விக்கெட்களும் 56 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாய் ஹோப் ஓட்டமின்றிய நிலையில் ரன்அவுட் ஆக, சொலமன் ஹெட்மியர் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தனித்து போராடிய அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் இறுதிவரை களத்தில் நின்று 54 ஓட்டங்களை பெற்றார்.

இந்தியாவின் பந்துவீச்சு ஆற்றல் மேலொங்க, மேற்கிந்தியத்தீவுகள் அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

கலீல் அஹமட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோஹித் சர்மா தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Sharing is caring!