உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இன்று சவுதி அரேபியா, உருகுவே மோதுகின்றன

உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இன்று சவுதி அரேபியா, உருகுவே மோதுகின்றன. இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவே அணி இன்று வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெற்று நாக் அவுட் பிரிவிற்கு தகுதி பெற்று விடும் என்பதால் இன்றைய ஆட்டம் தீவிரமாக இருக்கும். உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சூரஸ்க்கு இது 100வது போட்டியாகும்.

2010ல் காலிறுதியில் கானாவுக்கு எதிராக பந்தை கையால் தடுத்ததாக சஸ்பென்ட் செய்யப்பட்டார் சூரஸ். அதன் பிறகு 2014ல் நடந்த உலக கோப்பை போட்டியில் இத்தாலி அணி வீரர் ஜியோர் ஜியோவின் தோள் பட்டையை கடித்தார்.

இதனால் அடுத்தடுத்து நடந்த 9 ஆட்டங்களில் இவருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதுவரை ஆடிய 99 ஆட்டங்களில் 51 கோல்கள் அடித்துள்ளார். இந்த அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கி வருகிறார்.

ஏற்கனவே முதல் ஆட்டத்தில் வென்றுள்ளதால், இந்தப் பிரிவில் இருந்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் உருகுவே முயற்சி செய்யும். எகிப்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் உருகுவே சிறப்பாக ஆடியது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

சவுதி அரேபியா வலுவான அணியாக இல்லை. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 5-0 என்கிற கோல்கணக்கில் ரஷ்யாவிடம் தோல்வியை தழுவியது. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பை போட்டிகளில் சவுதி: அரேபியா அணி வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இன்றைய போட்டியில் உருகுவே அணியை உருக்குலைய செய்து வெற்றி பெற தேவையான உஷார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது சவுதி. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என கணிக்கிற ஆட்டங்கள் அனைத்தும் பல்வேறு அதிர்ச்சிகளை தந்துள்ளதால் இன்றைய ஆட்டத்திலும் அதிர்ச்சியான மாற்றம் உண்டாக வாய்ப்பும் உள்ளது.

ரஷ்யா முதலிடம்: ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது, உருகுவே 1-0 என்ற கணக்கில் எகிப்தை வென்றுள்ளது.

ரஷ்யா 3-1 என எகிப்தை தோற்கடித்து ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எகிப்து மற்றும் சவுதி அரேபியா புள்ளிகள் ஏதும் பெறவில்லை.

Sharing is caring!