உலக கோப்பை தொடரில் வெளியேறியதால் அணி மாறுகிறார் ரொனால்டோ?

ஐரோப்பிய சாம்பியன் அணியான ரியல் மாட்ரிட்டில் இருந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ விலகி இத்தாலி நாட்டை சேர்ந்த ஜுவென்டஸ் அணியில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, 2009ம் ஆண்டு, சுமார் ரூ. 720 கோடி கொடுத்து ரியல் மாட்ரிட் அணி வாங்கியது.

அந்த அணியில் சேர்ந்தது முதல், 4 முறை உலகின் சிறந்த வீரர் விருது பெற்றுள்ள அவர், 4 முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல ரியல் மாட்ரிட் அணிக்கு உறுதுணையாக இருந்தார். தனது 24வது வயதில் ரியல் மாட்ரிட்டில் சேர்ந்த அவருக்கு தற்போது வயது 33.

தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டதாலும் இனிமேல், அணியில் அவரது பங்களிப்பு குறையத் துவங்கும் என்பதாலும் இதுவரை வழங்கி வந்த பெரும் தொகையை அவருக்கு அளிக்க ரியல் மாட்ரிட் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அவர் வேறு அணியில் சேர ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இத்தாலி நாட்டின் ஜுவென்டஸ் அணியினர், ரியல் மாட்ரிட்டிடம் இருந்து சுமார் 800 கோடி ரூபாய்க்கு ரொனால்டோவை வாங்க பேச்சுவார்த்தை செய்து வருகிறார்களாம். ரொனால்டோவும் இதில் ஆர்வம் காட்டுவதாக வெளியாகும் தகவலை அடுத்து ரியல் மாட்ரிட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

கடந்த வாரம், உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் தோற்று வெளியேறிய போது, தனது வருங்காலம் குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டார் ரொனால்டோ.

இந்த நிலையில் இந்த திடீர் அணி மாற்றம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Sharing is caring!