எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான போட்டி இதுதான்: மனம்திறந்த அக்தர்!

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான போட்டி எது என்பதனை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கூறியுள்ளார்.

தான் விளையாடிய காலகட்டத்தில் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ப சொப்பனமாக திகழ்ந்த அக்தர், தனது கடந்த காலம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில். ‘2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான தோல்வி தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான போட்டி.

அந்த போட்டியில் அணி எடுத்த ஓட்ட இலக்கு 273. 274 என்ற இலக்கை அடிக்கவிடாமல் இந்திய அணியை எங்களால் சுருட்ட முடியாமல் போனது. அதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான போட்டி.

எங்களின் இன்னிங்ஸ் முடிந்தவுடன் இந்த ஓட்ட இலக்கு போதாது என்று தெரிவித்தேன். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. ஆனால் செஞ்சூரியன் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகம் என்பது எனக்கு தெரியும். ஆனால், கடைசியில் இந்தியா தான் வென்றது.

நான் பந்துவீச செல்வதற்கு முன்பே இடது காலில் வலி இருந்தது. வழக்கம்போல முழு வேகத்துடன் ஓட முடியவில்லை. இதனால் சச்சினும், சேவாக்கும் எனது பந்துவீச்சை பதம் பார்த்துவிட்டனர். சிக்சராக விளாசினார் சச்சின். எனது பந்தை பாயிண்ட் திசையில் சிக்சராக்கினார். எனது பந்தை விளாசிய அவருக்கு எப்படி வீசுவதென்றே தெரியாமல் இருந்தேன்.

அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை அழைத்தார் அணித்தலைவர் வக்கார் யூனிஸ். வாழ்நாளில் மோசம் நானும் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி காட்டினேன். ஆனால் அந்த போட்டியில் இந்தியா வென்றது. நல்ல பந்துவீச்சு திறமை இருந்தும், இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. அதுதான் எனது வாழ்நாளில் மோசமான போட்டி’ என கூறினார்.

கிரிக்கெட் உலகில் மிரட்டல் பந்து வீச்சாளராக பார்க்கப்பட்ட சொயிப் அக்தர், 1997ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளார்.

46 டெஸ்ட் போட்டிகளிலும் 163 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர், 160 கிமீ வேகம் வரை பந்து வீசக்கூடியவர்.

Sharing is caring!