எர்வீனின் சதத்தின் துணையுடன் ஆட்டநேர முடிவில் சிம்பாப்வே 228 ஓட்டங்கள் குவிப்பு: பங்களாதேஷ் தவிப்பு

பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்வே அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்ட நேர முடிவில், ரெஜிஸ் சகாப்வா 9 ஓட்டங்களுடனும், டொனால்ட் ரிபானோ ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

டாக்கா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாப்வே அணி, ஆரம்ப விக்கெட்டை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்தாலும், அதன்பிறகு சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பிரின்ஸ் மஸ்வாரே மற்றும் கெவின் கசுசா ஆகியோர் இணைந்து 7 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, கெவின் கசுசா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் கிரைஜ் எர்வீன் களத்தில் நங்கூரமிட்டார். எர்வீனும் பிரின்ஸ் மஸ்வாரேவும் இணைந்;து அணிக்கு சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இருவரும் இணைந்து 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, பிரின்ஸ் மஸ்வாரே 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பிரெண்டன் டெய்லர் 10 ஓட்டங்களுடனும், சிக்காண்டர் ரஸா 18 ஓட்டங்களுடனும், மருமா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆட்டநேர முடிவினை நெருங்கும் போது, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த கிரைஜ் எர்வீன் 107 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், நயீம் ஹசன் 4 விக்கெட்டுகளையும், அபு ஜெயிட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை சிம்பாப்வே அணி, நாளை தொடரவுள்ளது.

Sharing is caring!