ஒன்றா..ரெண்டா… மூன்று “டக் -அவுட்”டுகள்… 201 ரன்களில் சுருண்ட இலங்கை!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏழாவது ஆட்டம், இங்கிலாந்தின் கார்டிஃப்பில் உள்ள சோஃபியா கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் வீரர்கள், முதல் 18 ஓவர்களில் பட்டையை கிளப்பினர். 6 ரன் ரேட் என்ற விகிதத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால், 19 ஓவரிலிருந்து அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.

33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து, இலங்கை அணி திணறிய கொண்டிருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், சுமார் இரண்டரை மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

மழை விட்ட பிறகு, ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இருப்பினும், இலங்கை அணி கூடுதலாக 19 ரன்களை சேர்த்த நிலையில், அதாவது 36.5 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் குசல் பெரேரா மட்டும் அதிகபட்சமாக 78 ரன்கள் அடித்தார். இதில் 8 பவுண்டரிகளும் அடங்கும்.

நடுவரிசை ஆட்டக்காரர்களான மேத்யூ, தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கடைநிலை ஆட்டக்காரர் நூவன் பிரதீப் என மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் “டக் -அவுட்” ஆகி பெவிலியன் திரும்பினர்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முகமது நபி, 9 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி, 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி தற்போது விளையாடி வருகிறது.

Sharing is caring!