ஒரு தசாப்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் விளையாடப் போகும் இலங்கை கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப் படுத்தபட்ட போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நடத்தபட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, முதல் முறையாக இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு

கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, ஆரம்பத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக இருந்தது.

தற்போது, ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் மட்டும் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாடவுள்ளது.

அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ள இலங்கை அணி, செப்டம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரையில் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.

எனினும், ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 27ஆம் திகதி கராச்சியிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி 29ஆம் திகதி கராச்சியிலும், மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஒக்டோபர் 2ஆம் திகதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது.

முதலாவது ரி-20 போட்டி ஒக்டோபர் 5ஆம் திகதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ரி-20 போட்டிகள் 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் லாகூர் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி, தற்போது நியூஸிலாந்து அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது.

Sharing is caring!