ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் – லியோ!

ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த வீரர்கள் வரிசையில் உலகின் 7வது வீரராகக நியூஸிலாந்தின் லியோ கார்டர் இடம் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் ரி20 போட்டி தொடரில் இந்த சாதனையை படைத்தார். இதில் கான்டர்பரி கிங்ஸ், மற்றும் நொதேர்ன் நைட்ஸ் அணிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் லீக் ஆட்டம் நடந்தது.

இதில் கான்டர்பரி கிங்ஸ் அணியின் இடதுகை ஆட்டக்காரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

நொதேர்ன் நைட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அன்ரன் டெவ்சிச் வீசிய பந்தில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை லியோ கார்டர் விளாசினார். லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

உலகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். அதில் கரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்சல் கிப்ஸ், யுவராஜ் சிங், வோர்செஸ்டர்ஷையர் அணி வீரர் ரோஸ் வொய்ட்லி, ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் ஆகியோர் இருந்தனர். இப்போது 7வது வீரராக லியோ கார்டரும் இணைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த 4வது வீரரும் லியோ கார்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ரி20 போட்டிகளில் யுவராஜ் சிங்(2007), வொய்ட்லி(2017), ஹஸ்ரத்துல்லா ஜஜாய்(2018) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

Sharing is caring!