ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ்: டோவிசியாசோ முதலிடம்!

மோட்டோ ஜிபி பந்தய தொடரின் ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், டுகார்டி அணியின் வீரரான ஆண்ட்ரியா டோவிசியாசோ , முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 11ஆவது சுற்றான ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று ரெட் புல் ரிங்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 307.02 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுகார்டி அணியின் வீரரான ஆண்ட்ரியா டோவிசியாசோ, பந்தய தூரத்தை 39 நிமிடங்கள், 34.771 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, நடப்பு சம்பியனான ஹொண்டா அணியின் வீரரான மார்க் மார்கஸ், 0.213 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ, 6.177 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 சுற்றுகளின் முடிவில், மார்க் மார்கஸ் 230 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டுகார்டி அணியின் ஆண்ட்ரியா டோவிசியாசோ 172 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு டுகார்டி அணியின் வீரரான டானிலோ பெட்ரூசி 136 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்

இத்தொடரின் பனிரென்டாவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, எதிர்வரும் 25ஆம் திகதி, சில்வர் ஸ்டோன் ஒடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Sharing is caring!