கருண் நாயரை நீக்கியது ஏன்?

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், இளம் வீரர் கருண் நாயர் நீக்கப்பட்டது குறித்து தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட இந்தியா, அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் கருண் நாயர் (26 வயது) அதிரடியாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இவர் இடம் பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட இவருக்கு களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய 2வது இந்தியர் என்ற பெருமைக்குரிய கருண் நாயருக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்காமல் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரபலங்கள் பலரும் அணி நிர்வாகம் அவரைக் கையாண்ட விதம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தனக்கு வாய்ப்புகள் வழங்கப்படாததுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள கருண், அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் முறைப்படி தகவல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.இது குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று விளக்கம் அளித்துள்ளார். தகவல் தொடர்பில் நாங்கள் எப்போதும் பின்தங்கியதில்லை. தேர்வுக் குழுவின் முக்கிய பலமே இது தான். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு பாதகமான தகவலை தெரியப்படுத்த வேண்டியிருக்கும்போது சங்கடமாக இருக்கும். இது மிகக் கடினமான பணி.

சம்பந்தப்பட்ட வீரர்கள் ஏற்க மறுத்தாலும், நீக்கப்பட்டதற்கான உரிய காரணத்தைக் கூறி சரியான விளக்கம் அளிக்க வேண்டியது எங்கள் கடமை. இங்கிலாந்தில் இருந்தபோது கருண் நாயருடன் தேர்வுக் குழு உறுப்பினர் தேவாங் காந்தி அவ்வப்போது பேசி வந்தார். ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் பேசியதுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்குமாறு அறிவுறுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து நானும் அவருடன் விரிவாகப் பேசினேன். கருண் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கொடுப்பது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம். அவர் ரஞ்சி கோப்பை மற்றும் இந்தியா ஏ தொடர்களில் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரசாத் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் ரோகித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘அணியில் ரோகித்துக்கு இடம் இல்லையா? தேர்வுக் குழுவினர் உண்மையில் என்னதான் நினைக்கின்றனர் என்று யாருக்காவது தெரிந்தால் என்னிடம் கூறுங்கள். இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை’ என்று ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தைல் தகவல் பதிந்துள்ளார்.

Sharing is caring!