காலிறுதியில் ரஷ்யா: வலுவான ஸ்பெயினை வீழ்த்தியது

உலகக்கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஸ்பெயின் அணி, நேற்று மாஸ்கோவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ரஷ்ய அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறியது. ஸ்பெயினை வீழ்த்தியதன் மூலம் ரஷ்ய அணி, முதன் முதலாக உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டி துவங்கிய 12வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் அடித்த ஃப்ரீ கிக்கை, ரஷ்ய அணியின் 38 வயதான செர்ஜி இக்னாசேவிச், ஸ்பெயின் கேப்டன் செர்ஜியோ ராமோசுடன் மோதி உருண்டதில், ஓன்-கோலானாது.

இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரின் 10வது ஓன்-கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ரஷ்ய அணியின் சர்க்கிளில், ஸ்பெயின் வீரர் ஜெராண்ட் கையில் பந்து பட்டு திரும்பியதால், ரஷ்யாவுக்கு பெனால்டி கிக் கிடைத்தது.

ரஷ்ய வீரர் ஆர்டென் டிசைபா அற்புதமாக கோல் அடிக்க, இரு அணிகளும் சமநிலைக்கு வந்தன. அதன் பின்னர் ஸ்பெயின் வீரர்கள் கடுமையாக போராடியும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

75 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்களால், ரஷ்ய வீரர்களின் தடுப்பணையை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை.

இதையடுத்து, எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், பெனால்டி ஷூட்-அவுட் என முடிவானது.

ரியல் மாட்ரிட், பார்சிலோனா கிளப் அணிகளில் ஆடி வரும் முன்னணி வீரர்கள் பலர் ஸ்பெயின் அணியில் உள்ளதால், பெனால்டி ஷூட்-அவுட்டில் அந்த அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்ய அணியின் கோல் கீப்பர் இகோர் அகின்ஃபீவ், அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி விட்டார்.

அவரது அபாரமான தடுப்புகள், சொந்த மண்ணில் ரஷ்ய அணியை காலிறுதிக்கு தகுதி பெற வைத்து விட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்த போது, ஸ்பெயின் வீரர் கோகே அடித்த 3வது பெனால்டி ஷாட்டை ரஷ்ய கோல் கீப்பர் இகோர் அகின்ஃபீவ், அற்புதமாக தடுத்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

பின்னர் ஸ்பெயினின் மற்றொரு வீரர் லாகோ அஸ்பாஸ் அடித்த பெனால்டி ஷாட்டையும், இடதுபுறமாக டைவ் அடித்த வேளையில், காலால் தடுத்து, வெளியே அனுப்பினார். இதன் மூலம் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணி அபாரமாக வென்று, முதன் முறையாக உலகக்கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றது.

சொந்த மண்ணில் அணியின் இந்த சாதனையை ரஷ்ய மக்கள் நேற்று விடிய விடிய கொண்டாடினர்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட அவர்கள், இன்னும் 2 வெற்றி, எங்கள் அணியை பைனலுக்கு கொண்டு சேர்த்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Sharing is caring!