காவிமயமாக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி ?!

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது, பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் கருநீலம், அடர் ஆரஞ்ச் நிறத்துடன்கூடிய புதிய ஆடையுடன் (ஜெர்சி) இந்திய அணி வீரர்கள் விரைவில் மைதானத்தில் தோன்ற உள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளின் வீரர்களும் போட்டியின்போது அணியும் ஆடையின் (ஜெர்சி) அடிப்படை நிறம் பச்சையாகவே உள்ளது. இதனால் இந்த அணிகள் மோதும் போட்டிகளை ரசிகர்கள் தொலைக்காட்சியில் காணும்போது, எந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறதென அறிவதில் குழப்பம் அடைகின்றனர்.

இதேபோன்று இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் வீரர்களும் அணியும் ஜெர்சியின் அடிப்படை நிறம் நீலமாக இருக்கிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

“இந்த குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, ஐசிசி நடத்தும் போட்டிகளில், ஒத்த நிறமுடைய ஜெர்சியை கொண்டுள்ள அணிகள் மோதும் ஆட்டங்களில், வெளிநாட்டிலிருந்து வந்து விளையாடும் அணியின் வீரர்கள், தங்களுக்கான அனுமதிக்கப்பட்ட மாற்று ஆடையை அணிந்து விளையாடலாம். அந்த மாற்று ஆடைக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்” என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அண்மையில் அறிவித்திருந்தது.

ஐசிசி-யின் இந்த அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்காக, கருநீலம் மற்றும் அடர் ஆரஞ்ச் நிறத்தில் மாற்று ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலேயே, இந்திய அணி வீரர்கள் இப்புதிய ஆடையை அணிந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் வழக்கமான “ப்ளூ சர்ட்டை” அணிந்து தான் இன்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக, வரும் 30 -ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில், இந்திய அணி வீரர்கள் தங்களுக்கான புதிய ஜெர்சியுடன் களமிறங்குவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே  இந்திய அரசியல் மற்றும் சமூகம் காவி மயமாக்கப்படுவதாக சிலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினரின் உடை வண்ணத்தில் மாற்றம் கொண்டு வருவது என்ற நிகழ்வு இயல்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கும் மோடியே காரணம் என்ற குரல் ஒலிக்க ஆரம்பிக்கும் என்றே நாம் எண்ணுகிறோம். கூக்குரல் எப்படி இருக்குமென்றால் “மோடியின் ஆட்சியில் காவிமயமாக்கப்படும் கிரிக்கெட், ஏ…. பாசிச மோடியே கிரிக்கெட்டையும் விட்டு வைக்கமாட்டாயா. கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் இந்தியன் கண்டுபிடித்ததல்ல, இங்கிலாந்துகாரனின் கண்டுபிடிப்பு. அதிலும் உங்களின் ஹிந்துத்துவத்தை நுழைக்கப்பார்க்கிறீர்களா”  போன்ற குரல்களை விரைந்து எதிர்பார்க்கலாம் நாம்.

Sharing is caring!